கீழடியில் சமீபத்தில் கண்டறிந்த தொல் பொருள் தரவுகளும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் தமிழர்களின் வரலாற்றை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளதை அனைவரும் அறிந்ததே. அந்த பானை ஓட்டில் எழுத்தப்பட்ட பெயர்கள் உசிலம்பட்டி வட்டாரத்தில் கிடைக்கப்பட்ட பிராமி கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது என்பது மிக வியப்பான ஒன்று. அதை பற்றி இந்த காணொளியில் காண்போம்.
கீழடியில் கிடைக்கப்பெற்ற மண்பாண்ட சில்களில் ஆதன், குவிரன் என்ற இருவரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவை மிகவும் பழமையான தமிழ் தொல் எழுத்து வடிவம். இந்த மண்பாண்ட ஓட்டின் காலத்தை கார்பன் டேட்டிங் முறையில் மூலம் கிமு 6ம் நூற்றாண்டு என கண்டறிப்பட்டது..
2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்று திகழ்ந்தனர் என்பதை உலக ஆய்வாளர்கள் மத்தியில் கீழடி நிறுபித்தது.
கீழடியில் கிடைத்த ஆதன் என்கிற பெயர் பல்வேறு சங்க இலக்கிய பாடல்களில் இடம்பெற்றுள்ளது. தமிழக முழுக்க இந்த ஆதன் என்கிற பெயர் கிடைக்கிறது. உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பட்டி என்கிற கிராமத்தில் கிமு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டிலும் ஆதன் என்கிற பெயர் காணப்படுகிறது.
அந்த கல்வெட்டில் திடியில் ஆதன் என்று எழுதப்பட்டுள்ளது. திடி என்பது திட்டு , மேடு அல்லது மலை முகடை குறிக்கும். திடியில் என்ற ஊரைச் சேர்ந்த ஆதன் என்பவர் கொடையாக அமைத்து கொடுத்த கற்படுக்கை என்று ஐராவதம் மகாதேவன் அவர்கள் பொருள் கூறியுள்ளார்.
திடியில் ஆதன் என்ற பெயர் தான் தற்போது திடியன் என்று பெயராக வழக்கில் உள்ளது. இன்றும் திடியன் மலை இதற்கு ஆதாரமாக உள்ளது.
மேலும் உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள கொங்கற் புளியங்குளம், விக்கிரமங்கலம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் அழகர் மலை பகுதியிலும் ஆதன் என்கிற பெயரில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் அதிகளவில் உள்ளது.
கீழடியில் கிடைக்கப் பெற்ற மற்றொரு பெயர் குவிரன் . இந்த பெயரும் உசிலம்பட்டிக்கு அருகில் விக்கிரமங்கலத்தில் உள்ள உண்டாங்கல்லு மலையில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் பேத்தலை குவிரன் என்றும், மற்றொரு கல்வெட்டில் செங்குவிரன் என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் இடம்பெற்ற அதே பெயர்கள் உசிலம்பட்டி யில் உள்ள கல்வெட்டிலும் இடம்பெற்றுள்ளது என்பது ஆச்சிரியமாகவே உள்ளது.
இதிலிருந்து கீழடிக்கும் உசிலம்பட்டிக்கும் உள்ள தொடர்பை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடியும். கீழடிக்கும் உசிலம்பட்டிக்கும் வெறும் 50 கிலோ மீட்டர் தொலை தூரம் தான் உள்ளது. தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் மதுரையில் தான் உள்ளது.
கீழடி என்பது தமிழர் நாகரீகத்தின் தொல்லியல் சான்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கீழடி கிராமத்தில் சேர்ந்த முருகேச தேவர் என்பவர் ஆய்வுக்கு கொடுத்த இந்த நிலத்தின் மூலமாக தான் தமிழர்களின் தொல்லியல் முடிவுகள் உலக அரங்கிற்கு தெரிய வந்தது.
ஆய்வுகள்
மாய கருப்பன்

Post a Comment